கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 15 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையகப் பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி. இவர் கல்முனைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த ஜனவரி 15ஆம் திகதி இரவு, தன்னை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கல்முனைப் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த ஜனவரி 18ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கல்முனை தலைமையகப் பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

