டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக பொறுப்பேற்ற ஜனாதிபதி

anura kumara dissanayake 1

டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக பொறுப்பேற்ற ஜனாதிபதி

அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக கடமைகளை நேற்றையதினம் (05.12.2024) பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும்.

வறுமையை ஒழித்தல், சமூக மனப்பாங்குகளை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும்.

கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை அமைச்சொன்று இருந்ததை நினைவு கூர்ந்ததோடு, தற்போது ஒவ்வொரு அமைச்சும் நிர்மாணப் பணிகளையே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில் அமைச்சுக்கு இரண்டு பாரிய கட்டிடங்கள் உள்ள போதிலும் இன்னும் மக்களின் வரிசையில் குறைவில்லை எனவும், அதற்கான தீர்வுகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியமானது.

டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 15 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் பணியாளர்களை இரண்டு இலட்சமாக அதிகரிப்பது, முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான செயல் திட்டத்தை எதிர்வரும் 5 வருடங்களில் செயல்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சராக பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version