சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்: அநுரகுமார சீற்றம்

tamilni 380

சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்: அநுரகுமார சீற்றம்

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரின் (சரத்வீரசேகரவின்) மூளையைப் பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23.11.2023) நடைபெற்ற 2024 ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இனவாதக் கருத்துக்களின் வெளிப்பாடுகளால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்குக் கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரின் (சரத் வீரசேகர) மூளையைப் பரிசோதனை செய்ய வேண்டும். இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை.

இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். இனவாதத்தைப் பரப்பி அதன் ஊடாக தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கின்றார்கள்.

வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமது அரசியல் செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதாக அமையும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version