சீரற்ற காலநிலை: மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் 640 பாடசாலைகள் தவிர மற்ற அனைத்தும் நாளை திறப்பு!

1737374118 school students 6

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் நாளை (டிசம்பர் 16) முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், ஏனைய மூன்று மாகாணங்களில், 640 பாடசாலைகள் மாத்திரம் நாளைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அந்த மாவட்டங்களிலுள்ள ஏனைய பாடசாலைகள் மீள திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 524 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 5 பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்டத்திலேயே அதிகளவான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, மஹியங்கனை கல்வி வலயத்தில் 3 பாடசாலைகளும், பிபிலை வலயத்தில் ஒரு பாடசாலையும், பசறை வலயத்தில் 88 பாடசாலைகளும், பதுளை வலயத்தில் 112 பாடசாலைகளும், வியலுவ வலயத்தில் 70 பாடசாலைகளும், வெலிமடை வலயத்தில் 110 பாடசாலைகளுக்கு, பண்டாரவளை வலயத்தில் 140 பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், திறக்கக்கூடிய நிலையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் நாளை தினம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

Exit mobile version