வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்!

tamilni 292

வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் ஆண்டியம்பலம் மத்திய மருந்தகத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மினுவாங்கொடையில் இருந்து விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி எதிர்த் திசையில் இருந்து வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் பின் இருக்கையில் பயணித்த இளைஞரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

தபெம்முல்ல மற்றும் மகேவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 மற்றும் 25 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வாத்துவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் 52 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 56 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

அம்புலுவாவ, ஹெம்மாதகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 75 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version