உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

121664732

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று (நவம்பர் 11) நண்பகலில் பாடசாலையின் மூன்று மாடிக் கட்டடத்திலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பம்பலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான குறித்த மாணவி, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாகத் தோற்றியுள்ளார்.

உயிரியல் (Biology) வினாத்தாள் வழங்கப்படும் நேரத்திற்குச் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர், பாடசாலையின் மூன்று மாடிக் கட்டடத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி அவர் கீழே குதித்துள்ளார் எனப் காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கீழே குதித்த மாணவி, அதிர்ஷ்டவசமாக கார்பட் இடப்பட்டிருந்த வீதியில் விழுந்ததால், அவரது கால்களில் மட்டுமே கடுமையான காயங்கள் ஏற்பட்டு, உயிர் தப்பியுள்ளார் எனச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஒரு “அற்புதம்” என நேரில் கண்டவர்கள் கூறியதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த மாணவி பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாகவே அச்சத்தில் இருந்ததாகக் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்துப் பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version