24 663ac00ab1eb9
இலங்கைசெய்திகள்

நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் நல்லிணக்கம் ஏற்படாது: சுமந்திரன்

Share

நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் நல்லிணக்கம் ஏற்படாது: சுமந்திரன்

இலங்கையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு இன்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்(M.A Sumanthiran) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த மே மாதத்துடன் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் நல்லிணக்கத்துக்கான செயலணி தொடர்பான அரசு முன்மொழியும் சட்டமூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இதிலே நான் சொன்ன சில விடயங்களை இந்தச் சபையில் பதிவு செய்வது அத்தியாவசியம் அதாவது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் விசேடமாகவும் மற்றும் யுத்த காலம் முழுவதும் பலவிதமான அத்துமீறல்கள் நடந்துள்ளன.

உலகத்தில் நடக்கும் எந்தவொரு யுத்தமும் சுத்தமானது கிடையாது அத்தோடு சுத்தமான யுத்தம் என்று எதனையும் அழைக்க முடியாது. ஆயுதப் போரில் அத்துமீறல்கள் நடந்தே ஆகும் ஆனால் அவ்வாறாக நடக்கும்போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பில் அரசுக்குப் பொறுப்பு உள்ளது அதாவது அத்துமீறல்கள் தொடர்பில் விசாரிப்பதில் விசேடமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் என்ன நடந்தது யார் இதற்குப் பொறுப்புஅவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்ற விபரங்களை உறவினர்களுக்குத் தெளிவுபடுத்துவதும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதும் அரசின் பொறுப்பாகும்.

காணாமல் ஆக்கப்படுவது பலரால் செய்யப்பட்டிருக்கலாம் ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவுக்கு முன்னால் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இறுதி இரண்டு நாட்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரச படையினரிடம் சரணடைந்தனர் என்று அரசு நியமித்த ஆணைக்குழுவினாலேயே சொல்லப்பட்டுள்ளது.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும் அத்துடன் இந்த விடயத்தில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு, உடலகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு போன்றவற்றில் பலவிதமான விடயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டு முன்மொழிவுகள் உள்ளன.

எந்த முன்மொழிவும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை அத்தோடு இறுதியாக இந்த அனைத்து ஆணைக்குழுக்களின் முன்மொழிவுகளையும் ஆராய்வதற்காக இன்னுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் முன்மொழிவுகளும் உள்ளன இவை எவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை இவை அரசின் ஆணைக்குழுக்களாகும் அத்தோடு இவற்றின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தாது தற்போது இன்னுமொரு நல்லிணக்கத்துக்காகச் செயற்படுத்தப்படும் செயலணி ஒன்று பிரேரிக்கப்பட்டுள்ளது.

இவை எங்கள் மக்கள் மத்தியில் எந்தவிதமான நம்பிக்கையையும் கொடுப்பதாக இல்லை அத்தோடு ஒரு உள்ளகப் பொறிமுறை மூலமாக அவர்கள் சொல்லும் குறைபாடுகளுக்கு அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குச் சரியான நீதி கிடைக்காது என்பதற்கு இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது.

இன்னுமொரு செயலணியை அமைத்துச் செப்டெம்பரில் வரவுள்ள ஜெனிவா அமர்வுக்குக் காண்பிக்கும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக இதனைக் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.

எவ்வாறாயினும் உள்ளூர் பொறிமுறையில் நீதி கிடைக்கமாட்டாது எந்த நீதி விசாரணையாக இருந்தாலும் அது சுயாதீன விசாரணையாக இருக்க வேண்டும்.

ஒரு சுயாதீன விசாரணையாக இருந்தால் இந்தச் சந்தர்ப்பத்தில் அது சர்வதேச விசாரணையாக மட்டுமே இருக்க முடியும் . காரணம் போரிட்ட இரண்டு தரப்பில் ஒரு தரப்பு அரச தரப்பே ஆகவே அந்த ஒரு தரப்பில் போரிட்ட தரப்பினரே விசாரணை நடத்துவது அது விசாரணையே அல்ல.

சுயாதீன விசாரணையாக இருந்தால் அது சர்வதேச விசாரணையாக மட்டுமே இருக்கும் என்று நாங்கள் 2009ஆம் ஆண்டு காலத்தில் இருந்தே திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை 2015 நவம்பரில் வெளியிடப்பட்டது அதுவொரு சர்வதேச விசாரணை அறிக்கை. அதனைத் தொடர்ந்து நீதிமன்றப் பொறிமுறை வேண்டும் அத்தோடு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் இருப்பினும் அது செய்யப்படவில்லை.

அத்துடன் ஒரு நிரந்தர அரசியல் தீர்வின்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது இதனை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி புதிய அரசமைப்பைச் செய்யும் பணியைச் செய்தோம் அதுவும் நிறைவேறாது அந்தரத்தில் விடப்பட்டது ஆகவே, உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், அது கண்துடைப்பற்றதாக இருக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

இந்த அத்துமீறல்கள் தொடர்பில் நீதி செயற்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் நடப்பதற்கு உகந்த சூழ்நிலை இருக்க வேண்டும் ஆனால், உகந்த சூழ்நிலை இப்போது கிடையாது. நில ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன.

தொல்லியல் திணைக்களத்தாலும் வேறு திணைக்களங்களாலும் இவை நடக்கின்றன பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கல் போன்றவை நடந்துகொண்டிருக்க நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவொன்றை நியமிப்பது என்பது ஒரு சிரிப்புக்குரிய விடயமாகத்தான் எங்கள் மக்களால் பார்க்கப்படும்.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை நடந்துள்ளது ஆனால், சர்வதேச நீதிமன்றப் பொறிமுறை ரோம் சட்டத்தின் மூலம் மட்டுமே நடத்தப்படும்.

இந்நிலையில், இலங்கை அரசுக்கு எங்களின் சிபாரிசாக ரோம் சட்டத்துக்கு நீங்கள் உங்கள் இணக்கத்தைக் கொடுங்கள் நாங்கள் ஐ.நா.வில் உறுப்பினரே.

இந்த நாட்டுக்குள் நடந்தாலும் அது சர்வதேச குற்றமாகவே இருக்கின்றது அது தொடர்பில் சர்வதேசத்துக்குப் பொறுப்பு உள்ளது அது தொடர்பான பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச நீதிமன்றப் பொறிமுறை ரோம் சட்டத்தின் மூலம் மட்டுமே நடத்தப்படும் எனவே இலங்கை அரசு ரோம் சட்டத்துக்கு இணங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...