13ஆம் திருத்தத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பௌத்த தேரர்
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தேசிய வளங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இருக்கும் வளங்களை விற்பது, கடன் பெறுவது ஆகியன மாத்திரம் அரசாங்கம் பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது என தேசிய வளங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாற குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டில் முதலில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா? என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இல்லாத பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவது தற்போதைய பிரச்சினைகளுக்கு பிரதான காரணியாக உள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏதாவதொரு பிரச்சினை உள்ளது. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் ஒரு தரப்பினரது பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வு காண அரசாங்கம் முயற்சித்தால் அதை கடுமையாக விமர்சிப்போம்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த நடைமுறைத் திட்டத்தை அரசாங்கம் முதலில் கொண்டு வரட்டும் அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்ததை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.
அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முரண்பாடுகளை தோற்றுவிக்காமல் இருந்தால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தேசிய வளங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இருக்கும் வளங்களை விற்பது, கடன் பெறுவது ஆகியன மாத்திரம் அரசாங்கம் பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது. தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என குறிப்பிட்டார்
Leave a comment