புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பியுள்ள பெருந்தொகை பணம்: அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு 964 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணம் அனுப்பல் மற்றும் அதன் மதிப்பு 572 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியின் மொத்த அளவு 5970 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 58% குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகம் இலங்கைக்கு அனுப்பும் பணம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு பெரிதும் உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மருந்துகள், எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அந்நிய செலாவணி இன்றியமையாதது மற்றும் மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 187,000 இற்கும் அதிகமானோர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒவ்வொரு வருடமும் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்திற்கு பல நலன்புரி வசதிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

