பிரமாண்டமான சொகுசுக் கப்பல் நிறுவனமான ரிட்ஸ்-கார்ல்டன் (The Ritz-Carlton) நிறுவனத்துக்கு உரித்தான சொகுசுக் கப்பல் ஒன்று, 400 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இன்று (டிசம்பர் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அனர்த்தத்தின் பின்னரான சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
இந்தச் சொகுசுக் கப்பலை வரவேற்க, பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் பல உயரதிகாரிகள் துறைமுகத்தில் பிரசன்னமாயிருந்தனர்.
வருகையின்போது, பிரதி அமைச்சர் கப்பலின் குழுவினருடன் சுமூகமாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், கப்பலையும் பார்வையிட்டார். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பிரதாயபூர்வமான நினைவு பரிசுப் பரிமாற்ற நிகழ்வும் நடைபெற்றது.
இந்தக் கப்பல் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னர், அது நாளை (டிசம்பர் 15) காலி துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
இத்தகைய உயர்மட்ட சொகுசுக் கப்பலின் வருகை, உலக அரங்கில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் மீதான நம்பிக்கையையும் கவர்ச்சியையும் மீள நிலைநிறுத்த உதவுவதாகச் சுற்றுலாத் துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

