இலங்கை
யாழ். தையிட்டி இராணுவ வசமுள்ள காணிகள் – உள்ளே நுழைவோம் என எச்சரிக்கும் மக்கள்
யாழ் (Jaffna) வலி, வடக்கு – தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாது போனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம் என தையிட்டியை சேர்ந்த காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் கூறியுள்ளார்.
காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வடபிராந்திய சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் (Jaffna Public Library) நடைபெற்றது.
சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி க்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகியும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
கடந்த ஆட்சி காலங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் ஈடுபட்டும், மகஜர்களை கொடுத்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை.
தற்போது வந்துள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நாங்கள் மீண்டும் இதனை வலியுறுத்த வேண்டும் எ ன நாம் எதிர்பார்த்துள்ளோம். முப்படையினரின் அபகரிப்புக்கு அடுத்தபடியாக மதத்தின் பெயராலும் காணி அபகரிக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான 150 பரப்பு காணியை ஆக்கிரமித்து, மொரட்டுவ பல்கலைக்கழக கட்டடக்கலை நிபுணர் ஒருவர் பௌத்த தூபி ஒன்றை நிறுவியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நாம் போராட்டங்களை நடத்தினோம். ஆனால் முப்படை பாதுகாப்புடன் அங்கு பூசைகள் நடக்கிறது.
மிக விரைவாக எங்களுடைய காணிகள் எங்களுக்கு வேண்டும். எங்களின் காணிகளை எங்களுக்கு தருவதற்கு சட்டம் எதற்கு?
நாட்டினுடைய பொருளாதாரத்தில் விவசாயம், கடற்றொழில் ஊடாக மிகப்பெ ரும் பங்காற்றிய வலி,வடக்கு மண்ணை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தால், மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு வருவார்கள்.
காணிகளை மீட்பதற்காக எந்த நிலைக்கும் கீழிறங்க நாங்கள் தயாராக உள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் காணி உறுதிகளுடன் காணிகளுக்குள் நுழைவோம் எம்மோடு அனைத்து தரப்பினரும் வரவேண்டும் என்றார்.