இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேடமாக வரவழைக்கப்பட்ட கரிம மரக்கறிகள்: அநுர வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேடமாக வரவழைக்கப்பட்ட கரிம மரக்கறிகள்: அநுர வெளியிட்ட தகவல்
நுவரெலியாவில் (Nuwara Eliya) பயிரிடப்படும் இரசாயனம் பயன்படுத்தப்படாத மரக்கறிகளை தமது பாவனைக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதிகள் வரம்பற்ற சலுகைகளை அனுபவித்து வந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நுவரெலியாவில் இருந்து கிடைக்கும் மரக்கறிகளை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உணவு தயாரிக்க பயன்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சொந்தமான காணியில் ஜனாதிபதியின் பாவனைக்காக கரிம மரக்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.
அத்துடன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி செயலகத்திற்கு 60 கிலோகிராம் எடையுள்ள இரண்டு காய்கறி மூட்டைகள் வருவதை அவதானித்ததாக குறிப்பிட்ட அநுரகுமார, அவை நுவரெலியாவில் இருந்து அனுப்பப்படும் ஓர்கானிக் என்ற கரிம காய்கறிகள் என்று அறிந்ததாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் முன்னைய ஜனாதிபதிகள், சாதாரண மக்களுக்காக விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக்கூட உண்ணவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் அவ்வாறான சலுகைகளையும் அந்த தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.