இலங்கை
வழக்குகளை தவிர்க்கும் ஜொன்ஸ்டன்
வழக்குகளை தவிர்க்கும் ஜொன்ஸ்டன்
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சுகவீனத்தைக் காரணம் காட்டித் தனக்கு எதிரான வழக்குகள் மற்றும் விசாரணைகளில் முன்னிலையாகாமல் தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டரீதியாக பதிவு செய்யப்படாத பென்ஸ் வாகனமொன்றைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள கடந்த வௌ்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
எனினும், மருத்துவக் காரணங்களினால் தன்னால் சமூகமளிக்க முடியாதிருப்பதாகவும், வேறொரு தினத்தை அதற்காக ஒதுக்கித் தருமாறும் அவர் தனது சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வர்த்தக அமைச்சராக செயற்பட்ட காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை தனது அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஜொன்ஸ்டனுக்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்கு நேற்றைய தினம் (15) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்து அகலும் வரைக்கும் குறித்த வழக்கில் ஜொன்ஸ்டன் நீதிமன்றத்துக்கு முன்னிலையாகாமல் பல்வேறு காரணங்களை முன்வைத்து தப்பித்துக் கொண்டிருந்தார்.
அதேபோன்று, நேற்றைய விசாரணைக்கும் அவர் முன்னிலையாகவில்லை. அதற்குப் பதிலாக அவர் சுகவீனமுற்றிருப்பதாக மருத்துவ அறிக்கையொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.