சூடுபிடிக்கும் அரசியல் களம்…! பிரதமர் பதவியை கோரும் நாமல்
அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு (Sri Lanka Podujana Peramuna) வழங்கப்பட வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ( Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நேற்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால் இவ்வாறான ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம மாவத்தையில் நேற்று சந்தித்து, எதிர்வரும் அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று இந்த சந்திப்பில் இணைந்திருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தலைமையில் இன்று (25) தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
Comments are closed.