இலங்கை
நாட்டில் தயாராகும் புதிய விமான நிலையம்
நாட்டில் தயாராகும் புதிய விமான நிலையம்
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் (Nimal Siripala De Silva) முயற்சியின் கீழ் ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நடவடிக்கைகளுக்காக நவீனமயமாக்கும் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்பு ‘RAF’ மின்னேரியா என்று அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டி ரோயல் விமானப்படைக்காக நிர்மாணிக்கப்பட்டது.
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் மத்தியில் அமைந்துள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2024 பாதீட்டின் கீழ் ஆரம்ப கட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்காக 2 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.
முதல் கட்டத்தில், தற்போதைய 2,287 மீட்டர் நீளமும், 46 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதை 2,500 மீட்டராக நீடிக்கப்படும்.
அத்துடன், ஏர்பஸ் ஏ320 மற்றும் போயிங் 737 ரக விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் கட்டுமானப் பணிகளை ஆறு மாதங்களில் முடிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.