இலங்கை
தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்
தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்
இறுதிப் போரிலே பல்லாயிரகணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வினை உலகத்தில் கடைசி தமிழ் மகன் உள்ளவரைக்கும் ஆறாத வடுவாக காணப்படும் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா. சரவணா தெரிவித்துள்ளார்.
ஜெயா. சரவணாவால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மே மாதம் 18 ஆம் திகதி எமது உரிமை போராட்டம் மௌனிக்கப்பட்ட கரி நாளாகும். வன்னி பெரு நிலப்பரப்பான முள்ளிவாய்க்காலில் எமது போராட்டம் நிறைவு பெற்றது.
இறுதி போரிலே பல்லாயிரகணக்கான மக்கள் உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. இந்த துன்பியல் நிகழ்வினை உலகத்தில் கடைசி தமிழ் மகன் உள்ளவரைக்கும் ஆறாத வடுவாக காணப்படும் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மையாகும்.
இறுதிப்போர் காலத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் மரணத்தின் ஓலங்களாகவே காணப்பட்டது. சுதந்திரத்திற்காக போராடி வீர மரணம் அடைந்த வீர மறவர்களையும் , இப்போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த அப்பாவி மக்களையும் நினைவு கூரும் புனித நாளே இந்நாள் ஆகும்.
இந்நாளிலே எமது உரிமை போராட்டத்தில் உயிர் துறந்த மக்களின் உயிர் மூச்சு இன்றும் காற்றோடு கலந்து தமது உரிமை தாகத்தோடு எம் மூச்சுக்காற்றோடு கலந்துள்ளது.
தமிழர் ஐக்கிய முன்னணி சார்பாக விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த வீர மறவர்களுக்கும், மக்களுக்கும் எமது வீர வணக்கத்தினை தெரிவித்துக் காெள்கின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.