இலங்கை
இலங்கையில் 30 வருடங்களாக பெரும் மோசடியில் சிக்கிய பெண்
இலங்கையில் 30 வருடங்களாக பெரும் மோசடியில் சிக்கிய பெண்
அஹுங்கல்ல பிரதேசத்தில் சுமார் 30 வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடு நோனி என்ற அனோமா சாந்திக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நேற்றைய தினம் (29) சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்போது காலி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடிக் கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளனர்.
ஏறக்குறைய 30 வருடங்களாக அஹுங்கல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் போதைப்பொருள் விற்பனை செய்து சம்பாதித்த பணத்தில் இந்த கப்பல்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், அவர் தனது உறவினர்கள் பெயரில் படகுகளை வாங்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நேற்று காலை காலி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று மீன்பிடி படகுகளை கண்காணித்துள்ளார்.
இதேவேளை, அஹுங்கல்ல பிரதேசத்தில் சந்தேகநபருக்கு சொந்தமான 03 வீடுகள், 05 கடைகள் மற்றும் 05 காணிகளும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபருக்கு சொந்தமான லொறி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு பெக்ஹோ, ஒரு வான் மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் என்பனவற்றையும் பொலிஸ் காவலில் எடுத்துச்சென்றுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர் 52 இலட்சம் ரூபாவை தனியார் நிறுவனமொன்றின் ஊடாக தயாரித்து வந்த மீன்பிடிக் கப்பலையும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட குடு நோனிக்கு சொந்தமான சொத்துக்களின் மொத்த பெறுமதி 11 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சொத்து குவிப்பு தொடர்பில் சந்தேகநபரான பெண் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட ஆறு பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.