இலங்கை
ரணில் உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித்
ரணில் உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித்
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றிக் கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் உட்பட மூவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்றையதினம் (07.02.2024) ஜனாதிபதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்தார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரே சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் வெளியேறும் வேளையில் ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்ததுடன் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதியின் அறிக்கையை அவதானித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ‘உட்கார்ந்து கேளுங்கள்’ என வெளியேறிய எம்.பி.க்களிடம் உரத்த குரலில் கூறியுள்ளார்.
அப்போது அமைச்சரை அமைதி காக்கும்படி அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.