இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு
இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட தொழிற்கல்வி மூலம் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் பயிற்சி நிறுவனங்களின் மூலம் அதிக இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பயிற்சி நெறிகளை உள்ளடக்க வேண்டியதன் தேவையை சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகருக்கும், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு அண்மையில் நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை – ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமெனவும், ஜேர்மன் தூதுவர் குறிப்பிட்டார்.
Comments are closed.