இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் உளவுத் துறை தகவல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவே வெற்றிபெறுவார். அதில் சந்தேகமில்லை. பெரும்பான்மையான ஆதரவு எமது தேசிய மக்கள் சக்திக்கே உள்ளது. உளவுத் துறை தகவல்களும் இதனையே தெரிவிக்கின்றன என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத்தான் இருக்கிறது. எனவே, இந்த வருடம் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். அதில் சந்தேகமில்லை.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. எம்மவர் ஜனாதிபதியானதன் பின்னர் இந்த நாடாளுமன்றம் எமக்குத் தேவையில்லையே.
எனவே, இந்த நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றம் ஒன்றை ஸ்தாபித்து இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். அநேகமாக முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்தியே அன்றி வேறெதற்கும் இல்லை. சாதாரண மக்களின் ஆய்வுகள் மாத்திரம் அல்ல. உளவுத்துறை தகவல்களும் அதனைத்தான் கூறுகின்றன.
எனவே, எவரும் பதற்றமடையத் தேவையில்லை. இதனால் இப்போது ஆட்சியாளர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். எங்களிடமிருந்து தவறுதலாக வெளிவரும் ஒரு சொல்லை பிடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு விரும்பிய கதையை புனைவார்கள். அந்தக் கதைக்கு ஊடக உரையாடல் இடம்பெறும்.
அதற்காக போராட்டம் செய்வார்கள். பத்து பதினைந்து பேரை சேர்த்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எமது கொள்கையை நாம் தெளிவுப்படுத்துகின்ற போதிலும் அதற்கு அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள். ஏனென்றால், அந்தளவிற்கு தேசிய மக்கள் சக்தி அவர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.
எனவே, இந்த நாட்டை நாசமாக்கிய சக்திகள் பயந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் எங்களுக்கு எதிராக சேறுபூசுகிறார்கள். அவதூறு கற்பிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.