இலங்கை
தமிழர்களே இலங்கையின் பூர்வகுடிகள் : சீ.வி.விக்னேஸ்வரன்
இந்த நாட்டின் பூர்வகுடிகள் தமிழர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ் மொழி வழக்கில் இருந்தது என பேராசிரியர் இந்தரபாலவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடாது என வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதாகவும், தமிழ் மக்களே பௌத்தத்தை தழுவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழர்களே நாட்டுக்குள் பௌத்தத்தை கொண்டு வந்ததோடு ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளிலேயே இலங்கையில் சிங்கள மொழி பயன்பாட்டுக்கு வந்தது.
அதேவேளை, சிங்களமொழியானது தமிழ் மற்றும் பாலி மொழிகளின் கலவை என்பதோடு துட்டகைமுனு மன்னன் ஒர் தமிழன் ஆவார்.
மேலும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையின் போது சிங்களவர்கள் திராவிட வழித்தோன்றல்கள் என்பது தெரியவந்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
75 ஆண்டுகளாக தமிழர்கள், சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளித்து அதன் மூலம் உரிமைகளை வென்றெடுக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.
அத்துடன், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் 3,000 ஆண்டுகளாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வரும் சமூகத்தினர் என்பதோடு சுதந்திரத்தின் பின்னர் சிங்களத் தலைவர்கள் அவர்களை உதாசீனம் செய்கின்றனர் எனவும் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.