இலங்கை
பதுளையில் மண்சரிவு அபாயம்: 201 பேர் வெளியேற்றம்
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 67 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் அந்தப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரி சஞ்சீவ சமரகோன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி பசறை, கனவரல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 குடும்பங்கள் (50 பேர்) கனவரல்ல இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49 குடும்பங்கள் (151 பேர்) கல்லுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குடும்பங்களுக்கான உணவு, மருத்துவ வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு லுணுகலை மற்றும் பசறை பிரதேச செயலக செயலாளர்களின் ஆலோசனையுடன் கிராம சேவகர் மற்றும் அனர்த்த நிவாரண சேவை அதிகாரி ஆகியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மண்சரிவு அபாயம் காரணமாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்புக்குப் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்த சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.