இலங்கை
விடுதலைப் புலிகள் தலைவரின் படம் பொறித்த ஆடை அணிந்த இளைஞனுக்குப் பிணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய படம் மற்றும் சின்னம் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினரால் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்படி இளைஞருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த கொடிகாமம் பொலிஸார், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அந்த இளைஞனை பிணையில் விடுவிக்குமாறு இன்று (27.12.2023) சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன், இளைஞரை விடுவிப்பதற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை மன்றில் செய்துள்ளார்.
இதனையடுத்து, இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி இளைஞனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.