இலங்கை
யாழில் பொலிஸாரால் இளைஞன் படுகொலை!! வலுக்கும் கண்டனங்கள்
யாழில் பொலிஸாரால் இளைஞன் படுகொலை!! வலுக்கும் கண்டனங்கள்
வட்டுக்கோட்டைப் பொலிசாரின் சட்ட விரோத சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் கொல்லப்பட்டமை மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றமிழைத்த பொலிஸார் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதோடு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிசார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இந்த விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி உள்ளார்கள்.
அது மாத்திரமில்லாமல் அந்த அச்சுறுத்தலின் விளைவாக தற்போது இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது. இங்கே குற்றம் இழைத்ததும் பொலிஸார்.
அந்த குற்றத்தை விசாரிக்க போவதும் அதே பொலிஸார். ஊடகங்கள் இந்த வழக்கிற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். அல்லது இந்த வழக்கின் உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்படலாம் – என்றார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குட்படுத்தப்ட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞனுக்கு நீதியான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொலிஸாரின் தடுப்புக்காவல் கொலைகள் எந்த ஒரு இடத்திலும் இறந்தவர்களுக்கான நீதி நிலைநாட்டபடவில்லை. இந்த இடத்திலும் நீதி நிலைநாட்டபடாது போய்விடும் என்ற அச்சம் தான் எமக்கு எழுகின்றது.
ஏனென்றால் பொலிஸ் திணைக்களத்தினை தமிழ் மக்கள் தமக்குரிய பாதுகாப்பான திணைக்களமாக ஒரு பொழுதும் கருதியது கிடையாது. அந்த பொலிஸ் திணைக்களம் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒரு திணைக்களமாக தான் தமிழ் மக்கள் பார்த்து வருகின்றார்கள்.
தமக்கு பிச்சை போடுகின்ற ஏவாலாளர்களின் கட்டளையினை நிறைவேற்றுகின்ற திணைக்களமாக தான் மக்கள் அதனை அவதானித்து வருகின்றார்கள்.
இங்கே நாம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதிலேயோ அல்லது கண்டன குரல் எழுப்புதுடனோ இதனை கடந்த போகமுடியாது. முழுமையான விசாரணை முடியும் வரைக்கும் நாங்கள் அனைத்து தரப்புக்களும் அவதானம் செலுத்த வேண்டும். வித்தியாவின் படுகொலை வழக்கில் எவ்வாறு தொடர்சியாக நீதிக்கான போராட்டம் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டபட்டதோ அவ்வாறு இங்கும் நீதி நிலை நாட்டபடவேண்டும் என்றார்.