அரசியல்
சிங்கள மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பை நடத்தும் சரத்வீரசேகர
சிங்கள மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பை நடத்தும் சரத்வீரசேகர
ஆயுதபலத்தால் கிடைக்காத தமிழீழத்தை பதின்மூன்றாம் திருத்தம் மூலம் பெற முட்படுகிறார்கள் என்று முட்டாள் தனமாக சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றி தனது அரசியல் பிழைப்பை சரத் வீரசேகர நடத்துகிறார் என வட. மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.
சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்றைய தினம்(14.10.2023)அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சரத் வீரசேகரவுக்கு வரலாறு தெரியாவிட்டால் 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தல் திணைக்களத்தில் இருக்கும் எடுத்து பாருங்கள்.
விஞ்ஞாபனத்தின் பிரதான கோரிக்கை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை மக்கள் ஆணையாக கோரியுள்ளனர் தமிழர் விடுதலைக் கூட்டணியினர்.
இதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த ஒட்டுமொத்த தமிழ் மக்களும் முழுமையான ஆணையை வழங்கினர்.
வடக்கு கிழக்கில் 19 தொகுதிகளில் 18 தொகுதி தமிழீழத்திற்கான ஆணையாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினார்கள்.
19 தொகுதியாகிய கல்குடாவில் 577 வாக்குகள் பின்னடைவு ஏற்பட்டது ஆனால் 95% மக்கள் தமிழீழத்திற்கான சர்வஜன வாக்காக தமது ஆதரவை வழங்கினர்.
இப்படியான தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை சிங்கள ஆட்சியாளர் மறுத்து வன்முறையை கட்டவிழ்த்ததன் விளைவே நாட்டின் இன்றைய அவல நிலைக்கு மிகப் பிரதான காரணம்.
பதின்மூன்றாம் திருத்தம் தற்போதைய அரசியல் அமைப்பில் ஒரு இடைச் செருகலாகவே உள்ளது முழுமையான அதிகாரங்களை முறைப்படி மாகாணங்களுக்கு பகிரப்படவில்லை என்பது இலங்கையில் வாழும் சாதாரண குடி மகனுக்கும் தெரியும்.
ஆனால் வீரசேகர இதனை பெரிய நாகபாம்பு போல காட்டி இனவாதம் பேசுகிறார்.
இலங்கைத் தீவில் எதிர்காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச பூகோள பிராந்திய சக்திகள் தமிழீழத்தை உருவாக்கியே தங்களது அடுத்த கட்ட பூகோள அரசியலை நகர்த்த முடியும் என்ற கசப்பான உண்மையை சரத் வீரசேகர புரிந்துதான் ஆக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.