இலங்கை

கரையோர வழித்தடத்தில் உலக சாதனை முயற்சி

Published

on

கரையோர வழித்தடத்தில் உலக சாதனை முயற்சி

உலக சாதனை படைக்கும் நோக்கில் கரையோர வழித்தடத்தின் ஊடாக இலங்கையை சுற்றி பயணித்து வரும் சாதனை வீரர் பருத்தித்துறை கரையை கடந்து பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

பருத்தித்துறை கரையை கடந்து (06.10.2023) முற்பகல் மணிளவில் குறித்த சாதனைப் பயணத்தை தொடர்ந்துள்ளார்.

காலி – அல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த தடகள பயிற்சியாளரான சமன் உடுகம சூரி (வயது 52) என்பவர் கடந்த செப்டெம்பர் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் இருந்து சாதனை நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

அங்கிருந்து இலங்கையின் தென் கரையோரத்தினூடாக பயணித்து கிழக்கு கரையோரம் வழியே (06.10.2023) வடமராட்சியை வந்தடைந்துள்ளார்.

நடை, ஓட்டம், நீச்சல் என கலப்பு நிலையில் இந்த சாதனை பயணத்தை முன்னெடுத்து வருகின்றார்.

தொடர்ந்து வடமராட்சி கரையோரங்களினூடாக யாழ்ப்பாணம் கரையோரத்தை அடைந்து மன்னார் கரையோரப்பகுதி ஊடாக இலங்கையின் மேற்கு கரைவழியே கொழும்பு துறைமுக நகரில் ஆரம்பித்த இடத்தை சென்றடைவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2000 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் இருதடவை இதே போன்று இலங்கையை கரைவழியாக பயணித்துள்ள போதிலும் குறித்த பயணத்தை உலக சாதனை புத்தகத்தில் சேர்ப்பதற்கு தகுந்த ஆதாரங்களை சமர்பிக்க முடியாத நிலையினால் அது சாத்தியப்படவில்லை எனவும் அதனால் இம்முறை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்வற்கு ஏற்றவாறு அத்தாட்சிப்படுத்தல்களுடன் நடைபயணத்தை திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

35 ஆவது நாளில் இச்சாதனை நடைபயணத்தை நிறைவு செய்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் இடைவழியே பயணத்தை தொடர்வதில் ஏற்பட்ட நிலமைகள் காரணமாக உத்தேசிக்கப்பட்ட நாட்களை விட கூடுதலான நாட்கள் இப்பயணத்திற்கு எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாதனை பயணத்தில் கடற்கரையோரமாக செல்வதில் நிலவமைப்பு காரணமாக சாத்தியமற்றதாக காணப்படும் இடங்களில் கடலில் நீந்தியும், ஏனைய இடங்களில் சாலை மார்க்கத்தை தவிர்த்து கடற்கரையோரமாகவே பயணித்தை தொடர்ந்தவர், வடமராட்சி கரையோரத்தில் முருகைக்கற்பார்களுக்கு மத்தியில் ஓட்டமும் நடையுமாக பயணித்து வருவதாக கூறப்படுகிறது.

Exit mobile version