இலங்கை
நீதிபதி வெளியேறிய சூழலை உணர்ந்து பேசுவது நீதியமைச்சருக்கு நல்லது
நீதிபதி வெளியேறிய சூழலை உணர்ந்து பேசுவது நீதியமைச்சருக்கு நல்லது
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறிய சூழலை உணர்ந்து அவரது நிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்து கருத்திடுவது அமைச்சருக்கு நல்லது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நீதிபதி ரி. சரவணராஜா தனது பதவிகளைத் துறந்து வெளியேறியது தொடர்பில் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா அச்சுறுத்தலுக்குள்ளாக்கபட்டு தனது நீதிபதி பதவி பதவிவிலகல் செய்து நாட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றார். இலங்கையில் நீதிபதி ஒருவர் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அடிப்படையில் நாட்டைவிட்டு வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.
நீதிபதி ரி. சரவணராஜா குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தீர்ப்புக்களை வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கள பௌத்த இனவாத சக்திகள் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் அவரை அச்சுறுத்தும் தொனியில் பேசியதுடன், பௌத்த நிறுவனங்கள் அவருக்கு எதிராக சில வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தன.
இதுமாத்திரமல்லாமல், புலனாய்வுப் பிரிவினரின் தொடர்ச்சியான கண்காணிப்பு வலயத்திற்குள்ளும் அவர் உட்பட்டிருந்ததாகவும் அவரே தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்தே அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தோன்றுகின்றது.
இலங்கையின் நீதித்துறையில் ஒரு தமிழ் நீதிபதி ஏற்படுத்தக்கூடிய தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ள பௌத்த பிக்குகளோ, சிங்கள பௌத்த இனவாதிகளோ தயாராக இல்லை என்பதை குருந்தூர்மலை போன்ற அண்மைய சம்பவங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்சம் இலங்கையின் நீதித்துறையினூடாக எத்தகைய நீதி நியாயங்களையும் எதிர்பார்க்க முடியாது என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறிருக்கையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவரது நாடாளுமன்ற உரையின் போது நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தால் அல்லது அவர் மீது கண்காணிப்புகள் ஏதாவது ஏற்பட்டிருந்தால் அவர் உடனடியாகவே சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யும்படி ஆணையிட்டிருக்க முடியும் என்பதுடன் நீதித்துறை என்பது சுதந்திரமானது என்பதுடன் அது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்குக் கட்டுப்பட்டது என்றும் இதில் அரசாங்கத்தின்மேல் குற்றஞ்சாட்டுவதில் எந்தவித அர்த்தமுமில்லை என்றும் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஒருவிடயத்தை நீதியமைச்சருக்கு முன்வைக்க விரும்புகின்றோம்.
இலங்கையின் நீதித்துறை என்பதும் பொலிஸ் என்பதும், இராணுவம் என்பதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கின்றது. குருந்தூர்மலையில் எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என இவருக்கு முன்னர் பதவியிலிருந்த நீதிபதி லெனின்குமார் ஒரு கட்டளையைப் பிறப்பித்திருந்தார்.
ஆனால் அந்தக் கட்டளை மீறப்பட்டு பௌத்தபிக்குகள் இராணுவத்தினரதும் பொலிஸாரினதும் ஆதரவுடன் அங்கு ஒரு புதிய பௌத்த கோயிலை கட்டி முடித்திருக்கின்றனர். இது நீதிமன்றத்தீர்ப்பை அவமதிக்கும் ஒரு செயற்பாடு. இதற்கு எதிராக நீதி அமைச்சோ அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவோ மேற்படி சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையையும் எடுப்பதற்குத் தயாராக இல்லை.
பொலிஸாரோ இராணுவத்தினரோ தமிழ் நீதிபதிகளின் ஆணைகளை கட்டளைகளை மதித்து நடப்பதாகவும் தெரியவில்லை. இவ்வறான சூழ்நிலையில், சரவணராஜாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நீதிபதி ஆணையைப் பிறப்பித்திருக்கலாம், கைது செய்திருக்கலாம் என்பதெல்லாம் போலியானதும் அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்தாகவே இருக்கின்றது.
இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், உயிருக்கு உத்தரவாதம் இருக்கின்றது என்று நம்பினால் மட்டுமே அவர் கட்டளைகளையோ ஆணைகளையோ பிறப்பிக்க முடியும். அவரது உயிருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள பொழுது அவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்காது. அதைத்தான் சரவணராஜாவும் செய்திருக்கிறார் என்பதை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச புரிந்துகொண்டால் நல்லது.
இதுவெறும் சரணவராஜா என்ற நீதிபதி தொடர்பான விடயம் மாத்திரம் அல்ல. இலங்கையின் தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களது நடவடிக்கைகள் வெளிக்காட்டி நிற்பதுடன், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் தமிழர்களுக்கு சார்பாக அமைந்துவிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை கூட அவர்களுக்கு இல்லை என்பதையும் வெளிக்காட்டி நிற்கிறது.
இவ்வாறான நிலையில், இலங்கையின் நீதித்துறையிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை சிதறடிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் நீதித்துறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழப்பதற்கான காரணிகளுக்கு இது மேலும் வலுவூட்டியுள்ளது.
அதுமாத்திரமல்லாமல், மூதூர் குமாரபுரம் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டது தொடர்பாக திருகோணமலையில் நடைபெற்ற வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றி, சிங்கள ஜூரிகளைக் கொண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர்.
மீசாலையில் தமது சொந்தக் காணிகளைப் பார்வையிடச் சென்ற 8க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு மலசலக்கூடக் குழிக்குள் புதைக்கப்பட்டனர். இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஒரு இராணுவ சிப்பாய்க்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியது.
இந்தத்தீர்ப்பை கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிசெய்திருந்தது. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆனதும் அவர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். சிங்கள இராணுவத்தினரோ அல்லது உயர் பதவிகளில் உள்ளவர்களோ வடக்கு-கிழக்கு நீதிமன்றங்களில் அவர்களது வழக்குகள் விசாரிக்கப்படும் பொழுது தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று காரணம் கூறி அவற்றை சிங்களப் பிரதேசங்களுக்கு மாற்றிக்கொள்கின்றனர்.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்குகளை வடக்கு-கிழக்கு மேல்நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரியபொழுது அவை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றது. இலங்கையில் நடந்து முடிந்த யுத்தக்குற்றங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் ஒரு சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தார்கள். அது அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. தங்களது இராணுவம் புனிதமானது, அவர்கள் எந்தக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்று அரசாங்கம் கடப நாடகம் ஆடியது. பின்னர் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சர்வதேச சுற்றுலா பயணிகள் உட்ப 269க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதன் சூத்திரதாரிகள் யாரென பிரித்தானியாவின் சானல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதற்கு ஒரு சர்வதேச விசாரணை தேவையென கர்தினால் மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்ற அரசியல் மற்றும் சமய முக்கியஸ்தர்கள் குரல் கொடுத்தார்கள்.
அவ்வாறு சர்வதேச விசாரணை ஒன்று ஏற்படுத்தப்பட்டால் தமிழ் மக்களின் கோரிக்கையான யுத்தக்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே அதனைக் கைவிடும்படி பிரதி வெளிவிவகார அமைச்சர் கோரியிருந்தார்.
இதற்கமைய மேற்படி சர்வதேச விசாரணையைக் கோரியோர் தங்களது கோரிக்கையிலிருந்து பின்வாங்கியிருக்கின்றனர். அதாவது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எல்லோரும் மிகத்தெளிவாக இருப்பதையே இது காட்டுகின்றது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு நீதியமைச்சர் பேசுவது நல்லது என்று கருதுகின்றோம் என்றுள்ளது.