நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர
நீதிபதி சரவணராஜா மீது தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வு, அரச புலனாய்வின் பார்வை இருந்ததன் காரணமாகவும் சரத் வீரசேகர போன்றவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இருந்ததன் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் நிமித்தமே அவர் இந்த நாட்டைவிட்டு அவசர அவசரமாகச் சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு பிரதேசங்களிலும் மத்தியஸ்த சபைகளை உருவாக்கி அந்த பிரதேசங்களில் இருக்கின்ற பிரச்சினைகளை இலகுவாக இனம்கண்டு சரியான தீர்வுகளை அந்த மக்கள் பெறுகின்ற ஒரு விடயம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அவ்வாறான மத்தியஸ்த சபைகளை வலுப்படுத்தி எதிர்காலத்திலே இந்த நாட்டில் ஒரு நியாயமான தீர்வுகளை மக்களுக்கு வழங்கும் சபையாக இவை மாற்றப்பட வேண்டும்.
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் என்று சொல்லப்டுகின்ற போது இந்த நாடாக இருக்கலாம் சர்வதேசமாக இருக்கலாம் சமூக வலைதளங்கள் அதேபோன்று தனியார் ஊடகத்துறை போன்றன சுதந்திரமாக இயங்குகின்ற போதே நாட்டில் நடக்கின்ற அனைத்து விடயங்களும் இலகுவில் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும்.
இந்த நிலைமையில் தற்போது கொண்டுவரப்படும் இந்த நிகழ்நிலைக் காப்புச் சட்டமானது சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மீதான அடக்குமுறையாக அமைந்துவிடக்கூடாது. எமது நாடு இன்று மிக மோசமான இலஞ்ச ஊழலைச் சந்தித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடாக இருந்து கொண்டிருக்கின்றது.
எமது நாடு மீட்சி பெற வேண்டுமெனில் இலஞ்சம், ஊழல் என்கின்ற அடிப்படைகளில் இருந்து விடுபட வேண்டும். இதனை நாங்கள் அனைவரும் இணைந்தே செயற்படுத்த வேண்டும். இந்த நாட்டிலே மிக மோசமான ஊழல் நடைபெற்றிருக்கின்றது. கடந்த ஆண்டு சீனி இறக்குமதியில் ஏற்பட்ட ஊழல், எக்ஸ்பிரஸ் பேள் கப்பல் எரிந்த விடயத்திலும் கூட பாரிய ஊழல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறான ஊழல்களை வெளியில் கொண்டு வந்ததில் தனியார் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கின்றது. அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த விடயங்களை உடனுக்குடன் வெளியில் கொண்டு வந்து மக்களையும், அரசியல்வாதிகளையும் விழிப்படையச் செய்தன.
எனவே இந்த ஊடகங்களை, சமூக வலைதளங்களை இறுக்குகின்ற, அடக்குகின்ற விடயத்திற்கு இந்த நாடு செல்ல முடியாது என்பதில் நாங்கள் குறியாக இருக்கின்றோம். இவ்வாறான சட்டமூலங்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டிலே ஒரு நியாயப்பாடான விடயங்களை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக அமையாது.
இன்று இந்த நாட்டின் நிலை என்ன நீதிபதிகள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்றும், தங்களின் கடமைகளை சட்டத்திற்குட்பட்டு செய்ய முடியாது என்றும் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலைமையே காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா இந்த நாட்டைவிட்டு வெளியேறியமையும், இந்த வெளியேற்றத்திற்குக் காரணமாக முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மனித புதைகுழி விடயத்தில் அரசிற்கு சார்பான தீர்ப்பு வரமுடியாத நிலைமையும், சரத் வீரசேகர போன்றவர்கள் குருந்தூர் மலையில் இருந்து வெளியேற்றப்பட்டமையும், தியாகதீபம் திலீபனின் நினைவு ஊர்தி கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் அஞ்சலிக்கான அனுமதியை வழங்கியமையுமே காரணம் எனப் பலரும் கருத்துகளை முன்வைக்கின்றார்கள்.
உண்மையிலேயே இந்த நாட்டில் நீண்டகாலமாக தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறை இருப்பதை அனைவரும் அறியாமல் இல்லை. இதன் நிமித்தமே மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் பின்னால் புலனாய்வுத்துறை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது.
அதேபோன்றே நீதிபதி சரவணரராஜா மீது தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வு, அரச புலனாய்வின் பார்வை இருந்ததன் காரணமாகவும் சரத் வீரசேகர போன்றவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இருந்ததன் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட உயிர்அச்சுறுத்தல் நிமித்தமே அவர் இந்த நாட்டைவிட்டு அவசர அவசரமாகச் சென்றுள்ளார். இந்த விடயம் இந்த நாட்டுக்கும், நீதித்துறைக்கும் ஒரு சவாலான விடயமே.
எனவே இந்த நாட்டில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கு இடமளிக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை என்பதற்கு பல உதாரணங்களை கூற முடியும். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகாவாக இருந்த அசாத் மௌலானா கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் ஜோசப் பரராசசிங்கத்தின் கொலை வழக்கில் கூட நூறு வீதம் தீர்ப்பு சந்திரகாந்தனுக்கு எதிராக இருந்த நிலையில் நீதிபதியை மாற்றி திர்ப்பினை மாற்றம் செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா கூட ஆலயம் இருந்த இடத்தை உடைத்து அங்கு சந்தை அமைத்தாகவும், அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இதன் மீதான சட்ட நடவடிக்கைகளின் போது நீதிபதியை மாற்றி தனக்குச் சாதகமாக தீர்ப்பைப் பெற்றதாகவும் அவர் பல பிரச்சார மேடைகளில் வெளிப்படையாகப் பேசியிருக்கின்றார்.
இவ்வாறான விடயங்கள் எல்லாம் இந்த நாட்டில் நீதித்துறை எவ்வாறெல்லாம் இருந்திருக்கின்றது என்பதையே உணர்த்துகின்றன. ஒருபோதும் இந்த நாட்டில் நீதித்துறை சுயமாக இயங்கவில்லை என்பதையே காட்டுகின்றது. ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கும், அவர்கள் நினைக்கின்ற விடயங்களைச் சாதிக்கும் விதத்திலேயும் தான் இந்த நீதித்துறை செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறான விடயங்களை இனியும் அனுமதிக்கக் கூடாது. இந்த நாட்டிலே நீதியான, நியாயமான, சமத்துவமான அரசாங்கம் இயங்க வேண்டும். அது நாட்டு மக்களைப் பாதுகாப்பதாகவே இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.