இலங்கை

தமிழ் தேசத்திலே தமிழர்கள் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்

Published

on

தமிழ் தேசத்திலே தமிழர்கள் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்

தமிழ் தேசத்திலே தமிழர்கள் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது நீதிபதி மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.

போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று (01.10.2023) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிறுவர்களை விடுதலை செய் என சர்வதேசம் வரை குரல் கொடுத்தும் செவி சாய்க்காது இருந்த நேரத்தில் நாம் வீதியில் இறங்கி தொடர்ச்சியாக 14 வருடங்கள் கடந்தும் போராட்டத்தை போராடி வருகின்றோம்.

அனைத்து தாய், தந்தையுடனும் சிறுவர்கள் இருந்து சந்தோசமாக கொண்டாடும் இந் நாளிலே எமது சிறுவர்கள் எங்கே? எமது சிறுவர்களை யாரிடம் வித்தீர்கள்? அல்லது எமது சிறுவர்களை புதைத்தீர்களா? என தொடர்ச்சியாக கேட்டு கொண்டிருக்கின்றோம்.

ஆனால் சிறுவர்களை எமது உறவுகளை தேடும் போதும் எமக்கு நட்ட ஈடும், மரண சான்றிதழுமே வழங்குவதற்கு எத்தணித்து ஓஎம்பி அலுவலகத்தினாலே தொடர்ச்சியாக அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்கள். ஓஎம்பி அலுவலகம் வேண்டாம் என்பதனை கூறிக்கொள்கிறோம்.

உலக நாடுகள் கண்திறந்து எமக்கான நீதியை பெற்று தர வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்திலே சரியான நீதியை வழங்கும் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார். அவருக்கே இந் நிலமை என்றால் போராடுகின்ற எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எந்த நீதி கிடைக்கும் என்பதனை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டாக கூறுகின்றோம்.

இந் நாட்டில் நீதி இல்லை என்ற படியால் தான் சர்வதேசத்தை கேட்டு நிற்கின்றோம். தமிழ் தேசத்திலே தமிழர்கள் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதனை நீதிபதி அவர்கள் மூலமே தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எமக்கான உயிர் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

அத்தோடு சமூக செயற்பாட்டாளர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மதத்தால் எங்களை அடக்குகிறார்கள். பௌத்த மதத்தை கொண்டு வந்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களை நசுக்க வேண்டாம் என்பதோடு சர்வதேசம் நீதியை பெற்று தர வேண்டும் என தெரிவித்தார்.

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று (01.10.2023) காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது? சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு, கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே? குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?

மேலும், தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா? சின்னஞ்சிறு சிறார்களும் ஆயுதம் ஏந்தியவர்களா? பாடசாலை சென்ற மாணவன் எங்கே? போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் காணாமல் போன தமிழ் சிறுவர் மற்றும் குழந்தைகளின் ஒளிப்படங்களையும் இதன்போது அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version