இலங்கை
கிளிநொச்சியில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்
கிளிநொச்சியில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்
கிளிநொச்சியில் வெளிநாட்டு பிரஜையின் வீட்டிற்குள் குழுவொன்று நுளைந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(27.09.2023) நள்ளிரவு கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை இந்த குழு தாக்கியுள்ளது. சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் வெட்டியதாகவும், தடுத்த பெண்ணுக்கும் தாக்கியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இளைஞர் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து, நள்ளிரவு 20க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன், முதியவர்களான கணவன் மனைவி இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் சிசிரீவி, மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி அழித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கி பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பெற்றோல் குண்டும் தயாரித்து வீசப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நால்வர் வைத்தியசாலையில் வெட்டு காயங்களுடன்அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களுக்க முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையை கழிப்பதற்காக வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் ஆரம்பித்து முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சந்தேக நபர்களில் பலர் கடந்த காலங்களில் வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரணைமடு குளத்தின் கீழ் சட்டவிரோத மண்ணகழ்வு இடம்பெறுகின்றமை தொடர்பில் குறித்த குடும்பம் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவில் மண் மாபியாக்களே அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது குறித்த மணல் அகழ்வு முற்றாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவமானது பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.