இலங்கை
பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள்
பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள்
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்துக்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முக்கிய இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
அந்தவகையில், ஆளும் கட்சி உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நேற்று (19.09.2023) நாடாளுமன்றக் குழு அறை இலக்கம் 01 நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவில் இருப்பதால், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதற்காக அரச தரப்பு அமைச்சர்களின் பிரசன்னம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
விவாதத்தில் பின்பற்ற வேண்டிய விடயங்கள், வெளிப்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் மற்றுமொரு விசேட கலந்துரையாடலும் நேற்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிந்தது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் எந்தவித அரசியலும் இன்றி முழுமையான உண்மையைக் கண்டறிவதே தமது ஒரே நோக்கம் என இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.