இலங்கை
அரச நிறுவன முறைகேடுகளை முறையிட புதிய தொலைபேசி எண்
அரச நிறுவன முறைகேடுகளை முறையிட புதிய தொலைபேசி எண்
இலங்கையிலுள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் முறைகேடுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உடனடியாக ஆராய்ந்து உரிய தீர்மானங்களை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த விசாரணை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தொலைபேசி இலக்கத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் விசாரணையை தாமதப்படுத்துவதன் மூலம் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கும், முறைப்பாடு செய்யும் மக்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இராஜாங்க அமைச்சர் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேலும்,பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்திலுள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளில் இருந்து உரிய பதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்கள், தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.