இலங்கை
28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர
28 நிமிட காணொளி வெளியிட்ட சஹ்ரான்! ஞாபகப்படுத்தும் சரத்வீரசேகர
சனல் – 04 இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்கள் பொய்யானவை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இணையதளத்தில் வெளியிடப்பட்ட காணொளி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனல் 4 இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது இது முதல் தடவையல்ல. சனல் -04 இலங்கை தொடர்பில் 2011, 2012 மற்றும் 2013 ஆகிய காலப்பகுதிகளில் வெளியிட்ட பல காணொளிகள் பொய்யானவை என்பதை நான் ஜெனிவாவில் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளேன்.
ஜெனிவா கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் பொய்யான காணொளியை சனல் 4 தற்போது வெளியிட்டுள்ளது.
சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதினை வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தென்னிலங்கையில் சிங்கள பௌத்த அரச தலைவர் ஒருவரை உருவாக்குவதற்காக 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அன்ஷிப் அசாத் மௌலானா தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகச்செயலாளராக பதவி வகித்த நிலையில் 700 மில்லியன் ரூபாவினை மோசடி செய்ததினை தொடர்ந்து இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்று குறுகிய சுயநல நோக்கத்துக்காக அவர் செயற்பட்டு வருகின்றார்.
சஹ்ரான் தற்கொலை குண்டுத்தாக்குலை மேற்கொள்வதற்கு முன்னர் 28 நிமிட காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘தன்னையும், தாய், பிள்ளைகள் உட்பட ஏனைய தரப்பினரை அல்லாவுக்கு அர்ப்பணிப்பதாக ‘குறிப்பிட்டுள்ளார்.
எனவே தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவரும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.