இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்காததால் சனல் 4 ராஜபக்சக்களுக்கு எதிராக செயல்படுகிறதாம்!

Published

on

விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்காததால் சனல் 4 ராஜபக்சக்களுக்கு எதிராக செயல்படுகிறதாம்!

இறுதிக்கட்ட யுத்தத்தில் நந்திக்கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அகப்பட்ட பின்னர் அவரை விடுவிக்குமாறு சர்வதேசம் வலியுறுத்தியது. ஆனால் ராஜபக்சர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. ராஜபக்சர்கள் பிரபாகரனை விடுவித்திருந்தால் சனல் 4 இன்று ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்காது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் 2018.02.10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத் தாக்குதலின் பின்னர் கத்தோலிக்க, முஸ்லிம் சமூகத்தினர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை. இதனை எவரும் கதைப்பதில்லை.

அசாத் மௌலானா, சானியா பீரிஸ், நிஷாந்த டி சில்வா, லசந்த விக்ரமதுங்களின் சகோதரத் லால் விக்ரமசிங்க ஆகியோர் டொலர் பேராசையால் சர்வதேச மட்டத்தில் இருந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் நந்திக்கடலில் பிரபாகரன் அகப்பட்டபோது, அவரை விடுவிக்குமாறு சர்வதேசம் வலியுறுத்தியது. ஆனால் ராஜபக்சர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

ராஜபக்சர்கள் பிரபாகரனை விடுவித்திருந்தால் சனல் 4 இன்று ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்காது. ராஜபக்சர்கள் மீது வைராக்கியத்துடன் செயற்படுபவர்கள் டொலருக்கு அடிமையாகி செயற்படுகின்றனர். சனல் 4 காணொளிக்கு ஒரு சில ஊடகங்கள் முன்னுரிமை வழங்குகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பணத்தை மோசடி செய்து வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானா புகலிட கோரிக்கைக்காக கூறும் பொய்யை இந்த நாட்டு மக்கள் நம்புவார்களாயின் அனைவருக்கும் கடவுள் துணை புரிய வேண்டும் என குறிப்பிட்டார்.

Exit mobile version