வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணை
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மடு வலய கல்வி பணிமனை தொடர்பில் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரியவாறு பதில் வழங்காத மடு வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு மடு வலய கல்விப் பணிப்பாளருக்கு ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் அதிக பாடசாலைகளை கொண்ட வலயம் மடு வலயம் ஆகும்.
இங்கு ஆசிரியர் இடமாற்றம், கல்வி நடவடிக்கைகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகம் காணப்படுகின்ற நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் தெளிவு பெறும் நோக்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பல தகவல்கள் கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த தகவல் கோரிக்கை தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மடு வலய கல்வி பணிமனையின் தகவல் அலுவலர் மற்றும் குறித்த அதிகாரியினால் மேற்கொள்ளப்படாத நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உட்பிரிவு 39.3 குறித்த பகிரங்க அதிகாரத்தை மீறியிருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மடு வலய கல்வி பணிமனை மற்றும் அதன் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரியான A.C வொலண்டைனுக்கு (வலயகல்வி பணிப்பாளருக்கு) எதிராக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை உதாசீனம் செய்த வலய கல்விப் பணிப்பாளரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு தகவல் அறியும் ஆணைக்குழு தலைவர் D.C திசநாயக்க ஒப்பமிட்டு நேற்றைய தினம் (6.09.2023) கடிதம் அனுப்பியுள்ளார்.
மாகாண கல்விப் பணிப்பாளர் பெயரிட்டு ஆணைக்குழுவினால் விசாரணை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மடு வலய கல்விப்பணிப்பாளர் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் அக்கறையீனமாக நடந்து கொண்டு வருகின்ற நிலையில் குறித்த முறைப்பாடு மேற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.