இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம்

Published

on

விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம்

புதுக்குடியிருப்பு – ஒட்டுச்சுட்டான், இந்த பகுதிக்கு மிகப்பெரிய வரலாற்று சிறப்பு உண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஒட்டுச்சுட்டான் வீதியிலுள்ள வீட்டிலேயே வாழ்ந்து வந்தார்.

இதன் காரணமாக இந்த இடத்திற்கும், தனி ஒரு மதிப்பு உள்ளதுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பார்க்கப்பட்டு வந்தது. யுத்தம் நிறைவுற்ற பின்னர், இந்த பகுதியைக் காண தென்னிலங்கையில் இருந்தும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவானவர்கள் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்கள் இந்த இடத்தைப் பார்வையிட வந்ததுண்டு. சிலாகித்ததுண்டு.

இப்படி பலரால் வியப்பாக பார்க்கப்பட்ட, பெருமைக்குரிய இடத்தின் தற்போதைய நிலை மிகப்பெரும் மன வேதனை தருவதாக அமைந்துள்ளது. C17 தர வீதியாக இது தரப்படுத்தப்பட்டு காபற் போடப்பட்டுள்ள போதும் வீதியை சுத்தமாக பேணுவதில் பொது மக்கள் பாராமுகமாக இருக்கின்றனர்.

யுத்தம் மௌனிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த பகுதியும் பராமரிப்பற்று பார்ப்போர் முகம் சுழிக்கும் வகையிலும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே.

 

புதுக்குடியிருப்பு – ஒட்டுச்சுட்டான் வீதியின் இரு மருங்கிலும் பொதுமக்களால் கொட்டப்படும் கழிவுகளால் அந்த பகுதியே அசுத்தமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீட்டுக் கழிவுகளையும் வியாபார நிலைய கழிவுகளையும் பொறுப்பற்ற முறையில் திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர்.

ஒரு காலத்தில் மிக முக்கிய பகுதியாக பராமரிக்கப்பட்ட இந்த இடத்தில் பொதுமக்களின் சமகால செயற்பாடுகள் விமர்சனத்திற்குரியவையாக அமைகின்றன. புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரும் இது விடயமாக கவனமெடுக்காது இருப்பது வியப்புக்குரியது.

பலதடவை நலன் விரும்பிகளால் இதுவிடயமாக சுட்டிக்காட்டப்பட்டும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. இந்த வீதி நீண்டகாலமாக இப்படி கழிவுகளால் நிரப்பப்பட்டு வருகின்றது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையிலிருந்து புத்தடிப்பிள்ளையார் ஆலயம் வரையான வீதியின் இரு பக்கங்களும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

கண்ணாடிப் போத்தல்ளும் பொலித்தீன் பைகளும் அதிகமாக கொட்டப்படுவதோடு தொன்னோலைக்கழிவுகளுடன் போதைதரக்கூடிய மதுபான வெற்றுப் போத்தல்களும் கொட்டப்பட்டுள்ளன. அழுகி துர்நாற்றம் தரக்கூடிய விலங்குக் கழிவுகளையும் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.

யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட, புதுக்குடியிருப்பு – ஒட்டுச்சுட்டான் பகுதியில், வீதியின் இரு மருங்கிலும் மலை வேம்புகள் நடப்பட்டு வீதி சுத்தமாக பேணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போது அந்த மலைவேம்புகள் வளர்ந்து பெரிய மரங்களாகி நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அழகாக பேணப்பட்டு வந்த இந்த இடம் தற்போது பொதுமக்களின் பொறுப்பற்ற, செயற்பாடுகளால் துர்நாற்றம் வீசும் நிலைக்கு வந்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அங்கு வாழ்ந்த காலப்பகுதியிலும், அதன் பின்னரான நாட்களில் தென்னிலங்கையில் இருந்து வரும் பெரும்பான்மையினத்தவர்களாலும் பிரம்மிப்பாக பார்க்கப்பட்ட இந்த இடத்தின் இன்றைய நிலை என்ன என்று எம்மை நாமே கேள்விக் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

குறிப்பாக, நாட்டில் மிகக் கட்டுப்பாடுடனும், நேர்த்தியான சமூக கட்டமைப்புக்களுடனும் வாழ்ந்த பெருமை ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வாழ்ந்த இடங்களில் இருக்கும் பசுமையான மரங்களும், நினைவுச் சின்னங்களும் மக்களது வாழ்விடமும் அதற்கு சாட்சி.

இப்படி பெருமை கொள் சமூகமாக வாழ்ந்த எமது இனம் இன்று பொறுப்பற்ற தன்மையுடன் செயற்படுவதும், பொறுப்பில் இருப்பவர்கள் பாராமுகமாக செல்வதும் விரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

எனவே, உயர்வான இடத்தை அதே பெருமையுடன் பேண வேண்டியதும், எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டியது எமது தலையாய கடமை என்பதை நினைவில் கொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

Exit mobile version