இலங்கை

காணாமல் போனோரில் 15 பேர் தொடர்பான உண்மை!

Published

on

காணாமல் போனோரில் 15 பேர் தொடர்பான உண்மை!

காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை அடுத்து, அவர்களில் 15 பேருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டிருப்பதாக காணாமல் போனோர் பற்றி அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான இன்று கொழும்பில் உள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இதுவரையில் பூர்வாங்க விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ள 3900 முறைப்பாடுகள் தொடர்பில் நீதியை வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 6 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அறிவிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி 2000 – 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 15 பேருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டிருப்பதாகவும் மகேஷ் கட்டுலந்த இதன்போது அறிவித்தார்.

அதன்படி மேற்குறிப்பிட்ட 15 பேரில் ஒருவர் காணாமல்போகவில்லை என்றும், மாறாக அவர் உயிரிழந்துள்ளார் என்ற உண்மை கண்டறியப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய 14 பேரில் மூவர் புலம்பெயர் நாடுகளில் வசித்துவருவது கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் எஞ்சிய 11 பேரும் வயோதிபம் மற்றும் பல்வேறு நோய்நிலைமைகளின் விளைவாக உள்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வசித்துவந்ததாகவும், சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியதாகவும், அவர்கள் தற்போது அவர்களின் குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களது பெயர், விபரங்களை வெளியிடுவதை தவிர்ப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை இதன் மூலம் ஏனைய காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பை வழங்கக்கூடாது என்பதிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதிக கரிசனை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version