யாழில் கடும் வறட்சி – குடும்பங்கள் பாதிப்பு
யாழில் கடும் வறட்சி – யாழ்ப்பாண மாவட்டத்தில் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணத்தில் 70,408 நபர்களைக் கொண்ட 22,044 குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவற்றில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்குத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி உதவியுடன் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் குடிநீர்த் தேவையுடைய குடும்பங்களின் தொகை அதிகரிக்கக்கூடும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டுமெனவும் அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நெடுந்தீவு உட்பட தங்களால் நீர் வழங்கல் செய்யப்படும் பிரதேசங்களிற்குக் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கக் கூடிய வகையில் நீர் வழங்கலை மேற்கொள்ள முடியுமெனவும் தற்போது மாவட்டத்தில் அவ்வாறான சேவைகள் 18 குடிநீர் மூலங்கள் மூலமாகச் செயற்படுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் கால வறட்சியினை கருத்திற் கொண்டு நீர்ப் பாவனையில் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள இயற்கையான குளங்கள் மற்றும் கேணிகளைத் தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கு அந்த நீர் நிலைகளுக்குப் பொறுப்பான திணைக்களங்களால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென யாழ். மாவட்டச் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக இடம்பெற்ற வறட்சி தொடர்பான கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட தூர்வாரப்படாத குளங்கள் மற்றும் கேணிகளை மாநகர சபை பொறியியலாளரின் மேற்பார்வையின் கீழ் பொது அமைப்புகள் மற்றும் தனியார் மூலமாகத் தூர்வாரி சுத்தப்படுத்த முடியுமெனவும் அதற்கு சில நிறுவனங்கள் தாமாகவே முன்வருவார்கள் என யாழ்ப்பாண பிரதேச செயலாளரினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இவ்வாறான கேணிகளையும் நீர் நிலைகளையும் துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பொதுக்கிணறுகள், விவசாய கிணறுகள் பல பாழடைந்து பயன்பாடற்று காணப்படுவதாலும் அவற்றைச் சுத்தப்படுத்தினால் குடிநீர்த் தேவைக்கு அவற்றைப் பயன்படுத்த முடியுமெனவும் எதிர்காலத்தில் நன்னீரைச் சேமித்து வைக்க அவற்றைப் பயன்படுத்த முடியுமெனவும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.குடும்பங்கள் பாதிப்பு