இலங்கை
ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல்
ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல்
“ஜனாதிபதியுடனான சர்வகட்சி கலந்துரையாடலில் நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி பங்கேற்றாலும், இந்தக் கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறும்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் பிபில மெதகம தேசிய பாடசாலைக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் இன்று (25.07.2023) கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டு பொறுப்புடன் ஒரு கருத்து
“அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் சரியான முறையில் கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியும் அரசும் வரவேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது சர்வகட்சி மாநாடு என்று அறியக் கிடைக்கின்றது.
தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இடையே பொது நிகழ்ச்சி நிரல், வேலைத்திட்டம், கருத்து ஒற்றுமை, கூட்டுப் பொறுப்புடன் ஒரு கருத்துடன் செயற்படும் நிலைப்பாடுகள் இல்லை.
நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி இந்தக் கலந்துரையாடலுக்குச் சென்றாலும், இந்தக் கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறும்.
அரசின் பேச்சு நேர்மையுடன் நடந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். வெற்றிபெற வேண்டுமானால் பேச்சுகள் தூய்மையான நோக்கத்துடன் நடக்க வேண்டும்.
134 உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள்
அது அரசியல் ஏமாற்று வித்தையாக இருக்கக்கூடாது. நாட்டு நலனுக்காகச் செய்யப்படும் பணியாக பேச்சு அமையப் பெறுவதாக இருக்க வேண்டும்.
அரசிடம் தெளிவான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். இந்தக் கலந்துரையாடல்களுக்கு நாம் அழைக்கப்பட்ட போதிலும், நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் குறித்து எமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பக்கம் இருந்து எதிர்க்கட்சி இதில் கலந்துகொள்கின்றது. இந்த அரசில் அங்கம் வகிக்கும் 134 உறுப்பினர்களுக்கும் இடையில் பல கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.
கலந்துரையாடலுக்கு வருவதற்கு முன்னர் கருத்து வேறுபாடுகளைச் சமாளித்து ஒரு நிலைப்பட்ட கருத்தொற்றுமைக்கு அவர்கள் வரவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: பணத்திற்காக நபர் ஒருவர் அடித்துக் கொலை - tamilnaadi.com