இலங்கை

குருந்தூர்மலையில் தொடர்ந்து மீறப்படும் நீதிமன்ற உத்தரவு: வெளியான ஆதாரம்

Published

on

குருந்தூர்மலையில் தொடர்ந்து மீறப்படும் நீதிமன்ற உத்தரவு: வெளியான ஆதாரம்

குருந்தூர்மலையில் கல்கமுவ சந்தபோதி தேரர், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றக் கட்டளையை மீறி புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் கல்கமுவ சந்தபோதி தேரருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் புகைப்பட ஆதாரத்துடன் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி, குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், முதல் நாளான 13 ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸார் வழிபாட்டுக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் தடையுத்தரவைக் கோரியிருந்தனர்.

இதன்போது முல்லைத்தீவு நீதிமன்றால் சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. அக்கட்டளைகளில் குறிப்பாக குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்தில் எவ்விதமான சிலைகள் வைப்பதோ, சின்னங்கள் வைப்பதோ, கட்டுமானங்கள் மேற்கொள்வதோ தொல்லியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்தில் எவரும் ஏதேனும் சிலைகள் வைத்தாலோ, சிவலிங்கம், திரிசூலம் போன்றவற்றை நிறுவினாலோ, ஏதேனும் கட்டுமானங்களையோ, நிர்மாணங்களையோ செய்தால் அது நீதிமன்றக் கட்டளையை மீறும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

எவரும் இவ்வாறான செயல்களைச் செய்தால் அவர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறும் விதமாக கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளதாகவே நேற்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை அடிவாரத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் உள்ள நிலையில் இவ்வாறு புத்தர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு, குருந்தூர்மலையில் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version