இலங்கையர் ஒருவர் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய தேவைப்படும் பணம்
இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா அவசியம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்கள் தோறும் இந்த தொகையில் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 18,350 ரூபாவாக காணப்படுகின்றது. இதற்கமைய, இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவீனத்தை கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.
குறைந்த செலவீனத்தை கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு, ஒருவருக்கு மாதாந்தம் 16,268 ரூபாய் தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாதாந்தம் 68,560 ரூபாய் தேவைப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.