‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர் தூரம் மாசு அடைந்துள்ளதாகக் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (Marine Environment Protection Authority – MEPA) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகப் கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கற்பிட்டி, கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
நாடு முழுவதும் நிலவிய கடும் மழையின் காரணமாக மண்சரிவுக்கு உள்ளான அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வீடுகளிலிருந்தான பொருட்களும், குப்பைகளும் ஆறுப் பள்ளத்தாக்குகள் ஊடாக இறுதியாக இலங்கைக் கடற் பகுதியையே வந்தடைந்துள்ளன.
இது தவிர, பருவப் பெயர்ச்சி மழை நிலைமை காரணமாக இந்தியக் கடல் பகுதியில் காணப்பட்ட குப்பைகளும் நாட்டின் கரையோரப் பகுதியை வந்தடைந்துள்ளமை கண்காணிப்பு ஒன்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்காகக் கூலி அடிப்படையில் தொழிலாளர்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகவும், இதற்குக் குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் எடுக்கும் என நம்புவதாகவும் MEPA தெரிவித்துள்ளது.
இந்தக் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களைச் சேகரித்ததன் பின்னர், அவற்றை மீள் சுழற்சிக்கு (Recycling) உட்படுத்துவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களின் உதவியைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் அமைந்துள்ள கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் 13 பிராந்திய அலுவலகங்களின் உதவிகளை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் MEPA தெரிவித்துள்ளது.

