நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02-ஆம் பிரிவில் 14 வயதுடைய சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (02) இரவு நூரியவத்தை பகுதியில் சிறுவன் ஒருவன் தாக்கப்படுவதாக நூரி பொலிஸ் நிலையத்திற்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீடொன்றுக்கு அருகில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த சிறுவனை மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் உடனடியாக நூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுவனின் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் சடலம் தற்போது மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணம் இந்தக் கொலைக்குக் பின்னணியில் உள்ளதா என்பது குறித்து நூரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

