2009இல் யுத்தம் முடிந்ததும் சர்வதேசத்திற்கு மகிந்த வழங்கிய உறுதிமொழி!
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற பின்னர், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் யுத்தம் இல்லாத, வன்முறையற்ற ஒரு சூழல் உருவாக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுத் தலைவர்களிடம் கூறினார் என கிராமிய விதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
13ஆவது அரசியல் அமைப்பினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை சகல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
13ஆவது அரசியலமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தென்னிலங்கையில் இருந்து செயற்படும் முற்போக்கான மற்றும் இடதுசாரி கட்சிகளும் வழங்கும் ஆதரவிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.
13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ், காணி உள்ளிட்ட அதிகாரங்களில் பிரச்சினைக்கு உரிய விடயங்களை தவிர்த்து ஏனைய அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். 13 ஆவது திருத்தத்தால் பிரிவினைவாதம் தோற்றம் பெறாது.
பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல ஒப்பந்தங்களை கடந்துள்ளோம். 13 ஆவது திருத்தம் உறுதியாகவே உள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற பின்னர், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் யுத்தம் இல்லாத, வன்முறையற்ற ஒரு சூழல் உருவாக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுத் தலைவர்களிடம் கூறினார்.
இதற்கும் அப்பால் 13 பிளஸ் வழங்கப்படும் எனவும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சகல அரசியல் கட்சிகளும் இன, கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அதிகாரப் பரவலாக்கல் என்பது பிரதான காரணியாக இருக்கின்றது. ஒரு நாட்டின் வெற்றி அதனில் தங்கியுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்தந்த மாகாணங்கள் மாத்திரமன்றி அதனுடன் தொடர்புடைய மாவட்டங்கள், பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.
மத்திய அரசின் சலுகைகளை எதிர்பார்த்து கொண்டிருக்காமல் மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் போது அந்த மாகாணமும், மாவட்டமும், பிரதேசமும் அபிவிருத்தி அடையும்.
ஓர் இனத்துக்காகவோ அல்லது மதங்களை திருப்திப்படுத்தவோ சட்டங்கள் இயற்றப்படுவதில்லை. மாறாக அந்தப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் தேசிய வளங்களை நாட்டின் பொருளாதாரத்துடன் இணைப்பதற்காகவே 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறான ஒரு முன்மாதிரியான திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த எமது தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு மகாகணங்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. ஓர் இனம் அல்லது சமூகத்துக்காக உருவாக்கப்படவில்லை.
முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே, இதனை சகல மக்களும் ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு கட்சி பேதமின்றி ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment