வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருள் (Ice Drug) கொடுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 21 வயதுடைய பெண் ஒருவரைச் சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட 6 பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸ் நிலையச் சிறுவர் மற்றும் மகளிர் பணியகமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர்.
வெலிவேரிய பொலிஸ் நிலையம்: கடந்த 8ஆம் திகதி இரவு 10 மணியளவில் வெலிவேரிய பொலிஸ் நிலையத்திற்கு வந்த குறித்த பெண், சுயநினைவின்றி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் பெண் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்த பின்னர் அவள் சுயநினைவுக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.
காதலன் மற்றும் நண்பர்கள்: குறித்த பெண் பேலியகொடை பிரதேசத்தில் உள்ள ஓர் இளைஞனுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்ததுடன், காதலன் குறித்த பெண்ணை வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
அதன் பின்னர், குறித்த இளைஞன் தனது நண்பர்கள் சிலரையும் அறைக்கு வரவழைத்து, கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருளைக் குடிக்க வைத்து, அப்பெண் மயக்கமடைந்த பிறகு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான குறித்த பெண் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் 6 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.