ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மீதான லஞ்ச வழக்கு: ஜனவரி 16க்கு ஒத்திவைப்பு!

MediaFile 6 1

முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைக்காக, ஜனவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதலாம் பிரதிவாதி ரவி கருணாநாயக்க 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி முதல் அதே வருடம் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.

இரண்டாம் பிரதிவாதியான அர்ஜுன் அலோசியஸ் பணிப்பாளராகச் செயற்படும் தனியார் நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டிருந்த குடியிருப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றில் ரவி கருணாநாயக்க வசித்ததன் மூலம், இலஞ்சச் சட்டத்தின் 19 (இ) பிரிவின் கீழ் குற்றமொன்றைப் புரிந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச் செயற்பாட்டிற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் அர்ஜுன் அலோசியஸிற்கு எதிராக அந்த ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முறைப்பாட்டாளர் தரப்புச் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மேலதிக சாட்சி விசாரணையை ஜனவரி 16, 2026ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version