நவம்பர் புயல்கள் தீவிரமடைய காலநிலை மாற்றமே காரணம்: ஆராய்ச்சியாளர்கள் குழு அறிக்கை!

25 69341965c01f0

இலங்கை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தி நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட புயல்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினாலே மேலும் தீவிரமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மலாக்கா நீரிணையை அண்மித்து உருவாகி தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தைப் பாதித்த ‘சென்யா’ (Senya) புயலால் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் 969 பேர் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கமைய, இந்தோனேசியாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சுமார் 03 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘திட்வா’ (Ditwa) புயலினால் இலங்கையில் 639 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 191 பேர் காணாமல் போயுள்ளனர்.

‘திட்வா’ புயலினால் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார சேதம் சுமார் 07 பில்லியன் டொலர் என ஆரம்பகட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் புயல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தொடர்ந்து ஐந்து நாட்கள் பெய்த அதிக கன மழை மற்றும் இந்து சமுத்திரத்தின் வடக்குப் பகுதியில் கடல் நீர் வெப்பம் அதிகரித்தமை, இப்புயல்கள் மேலும் தீவிரமடையக் காரணமாக அமைந்தது எனத் தெரியவந்துள்ளது.

புயலுக்கு அண்மையில், இக்கடல் பிராந்தியத்தின் வெப்பநிலை 1991 முதல் 2020 வரையான காலப்பகுதியின் சராசரி வெப்பநிலையை விட 0.2 பாகை செல்சியஸ் (0.2°C) அதிகமாகக் காணப்பட்டதாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கடல் நீர் வெப்பநிலை அதிகரித்தமையானது புயலுக்கு மேலதிக வெப்பத்தையும் சக்தியையும் சேர்த்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், கைத்தொழில் புரட்சிக்கு முந்தைய கால வெப்பநிலையை விட தற்போது பூகோள வெப்பம் 1.3 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலை இல்லாவிடின், நவம்பர் மாத இறுதியில் இந்து சமுத்திரத்தின் நீர் வெப்பநிலை இதைவிட ஒரு பாகை செல்சியஸ் குறைவாக இருந்திருக்கும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

‘திட்வா’ புயலால் இலங்கையில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்த காலநிலை மாற்றத்தின் தாக்கம் 28% முதல் 160% வரை காரணமாக அமைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இவ்வாறான தீவிர புயல்கள் புதிய புவியியல் பகுதிகளில் மாறுபட்ட பயணப் பாதைகளுடன் ஏற்படக்கூடும் எனவும் இவ்வாராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version