ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உருவாகியுள்ள இக்கட்டான நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியன வாக்கெடுப்புக் கோரமால் இருக்கவும், எவரேனும் கோரினால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கவும் தீர்மானித்துள்ளன. இதனால், இந்த வரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமான மற்றும் மானியங்கள் 5,300 பில்லியன் ரூபா மொத்த செலவினம் 7,057 பில்லியன் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 1757 பில்லியன் ரூபாவாகும்.
2026 நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள்,வைத்தியர்கள், விவசாயிகள்,கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுயையினர் குறித்துவிசேட கவனம் செலுத்தப்பட்டது.
புதிதாக வரிகள் ஏதும் அடுத்தாண்டுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை.இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபாய்,பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாய், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாய்,கல்வி , உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாய், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாய், அரச நிர்வாகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகிறது.
நாட்டில் கடந்த வாரம் நிலவிய மிக மோசமான இயற்கை அனர்த்தத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இலக்குகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும். அரச செலவினத்துக்காக ஒத்துக்கப்பட்டுள்ள செலவினத்தை அதிகரிக்க நேரிடும்.
ஆகவே இந்த வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்து புதிய வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை,சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் நிதி நிலைமை மற்றும் தற்போதைய இக்கட்டான நிலைமையை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால திட்டமிடல் குறித்து விசேட உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் வாசிப்பின் போது வாக்கெடுப்பு கோரல் இருப்பதற்கும், அவ்வாறு ஏனைய எதிர்க்கட்சிகளின் சில வேளை வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கம் புதிய வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதேபோல் தற்போதைய நெருக்கடியான நிலையில் வரவு – செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு கோரும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை என தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்,எதிர்க்கட்சிகளில் எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் தாங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமலிருக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.இவ்வாறான நிலையில் வரவு- செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

