இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், பார்வையிடுவதற்காக வந்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில், ஏ-9 வீதியில் அப்பகுதி மக்களால் மயானத்துக்கு வெளியே, போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், எமக்கு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்பது வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறது.
எனவே எமது பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். தினம் தினம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து வெவ்வேறு விதத்திலான கொடூரங்களை எடுத்துக்காட்டும் மனித என்புத் தொகுதிகள் வெளிப்படுகின்றன.
கடந்த கால சிங்கள படைகளாலும் அரசாங்கத்தினாலும் இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு சர்வதேச தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பிரதிநிதிகள் இருவருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.

