சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

Suresh Sally 16

 

சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கின் பிரதிவாதியாக சுரேஷ் சலே இருந்தாலும், எந்த இடத்திலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரான் காசிம் பதுங்கி இருந்த இடம்கூட, தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான நிலந்த ஜயவர்தனவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அவரை கைது செய்ய அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வு முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவை செல்லாததாக்கி, உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கருத்து வெளியிட்ட சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே மத ரீதியான தாக்குதல் ஒன்று இடம்பெற வாய்ப்புள்ளதாக புலனாய்வுப் பிரிவினரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது .

இருந்தாலும், அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து 97 அறிக்கைகளை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக் கடதாசியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கும் 129 பேர் கொண்ட பட்டியலையும் அவர் சமர்ப்பித்திருந்த போதிலும், பிரதிவாதிகள் அது குறித்து முறையான விசாரணைகளை நடத்தவில்லை என சஞ்சீவ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் ஜயகி டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையில், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version